சமீபகாலமாக வெளிவரும் படங்கள் அனைத்தும் வன்முறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக சில வன்முறை காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்படும் சூழ்நிலையும் தற்போது உருவாகி கொண்டிருக்கிறது.
மேலும் வன்முறையை மையப்படுத்தி வெளிவரும் ஏதாவது ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துவிட்டால் அதுதான் ரசிகர்களுக்கு பிடிக்கிறது என்று அதே பாணியில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தொடங்குகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியிருக்கும் ஜெயிலர் பட போஸ்டர் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. ஜெயிலர் என்ற தலைப்பில் வெளிவந்த அந்த போஸ்டரில் பெரிய கத்தி ஒன்று ரத்தம் சொட்ட சொட்ட இருப்பது போன்று வெளியாகியிருந்தது.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தில் ஆக்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிக அளவில் இருக்கும் என்று பேசி வருகின்றனர். தற்போது இதைப்பற்றி சினிமா விமர்சகர் பிஸ்மி பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாட்டு மக்கள் நலன் தான் முக்கியம் என்று வீர முழக்கமிட்ட ரஜினி இதுபோன்ற வன்முறை கதைகளில் நடிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே பாணியில் தான் நாங்களும் வரப் போகிறோம் என்பதை சொல்லும் விதமாக தான் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டார்களா என்று தெரியவில்லை.
போஸ்டரிலேயே ரத்தம் தெறிக்கும் அளவுக்கு இவ்வளவு வன்முறை இருக்கிறதென்றால் படம் முழுக்க எவ்வளவு காட்சிகள் இருக்கும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். தற்போது அவருடைய இந்த கருத்துக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்தாலும், ரஜினி ரசிகர்கள் அவரை கடுமையாக பேசி வருகின்றனர்.