தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை பெற்று சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தில் அறிமுகமான இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
இவர் 1983 ம் ஆண்டு அந்தா கானூன் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ராமாராவ் இயக்கிய இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப் பச்சன், ஹேமமாலினி, அம்பரீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் தன் குடும்பத்தினரை கொன்ற கொலைகாரர்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.
இத் திரைப்படம் தமிழில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி அடைந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் யாரும் எதிர் பாரத அளவுக்கு மாபெரும் வெற்றி அடைந்தது.
இப்படம் விஜயகாந்திற்கு சினிமா திரையுலகில் ஒரு முக்கிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்த திரைப்படம் தமிழை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
அப்படி ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் மூலம் ரஜினிகாந்த் ஹிந்தி திரையுலகில் பெரிய அளவில் பிரபலமானார். தமிழை போலவே இப்படம் இந்தியிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்தி சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கும் ரஜினிகாந்த் நெருங்கிய நண்பராக மாறினார். இப்போதுவரை அவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தற்போது தமிழ் திரைப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த் கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் 2011ல் வெளியான ரா ஒன் என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.