தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவை தாண்டி அரசியலில் குதிக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு ரஜினிக்கு உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வரை இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த வயதிலும் தனது மார்க்கெட்டை நிலையாக நிறுத்தி வைத்துள்ளார்.
இறுதியாக ரஜினி நடித்து வெளியான தர்பார் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படமாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்ற ஆவலில் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் தவிர குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் நடித்துள்ளனர். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் உச்சகட்டமாக ஒரு ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுத்தனர். அதோடு நிற்காமல் அந்த ரத்தத்தை பேனரில் இருந்த ரஜினியின் மீது தெளித்து ரத்த அபிஷேகம் செய்தனர். இது சம்பந்தமான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
ரஜினி ரசிகர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கமும் ரஜினி ரசிகர்கள் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக அவர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது, “கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தனது ரசிகர்களை கண்டித்து நல்வழிப்படுத்த தவறிய ரஜினி இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அவர்களை கண்டிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.