இயக்குனர் சிறுத்தை சிவா உடன் ரஜினி முதல் முறையாக கூட்டணி அமைத்த படம் தான் அண்ணாத்த. முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் ஆகிய படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதுமட்டும் இன்றி இந்த படங்களில் ரஜினி சிட்டியில் இருப்பது போன்று நடித்திருப்பார்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு முற்றிலும் கிராமத்தானாக அதுவும் காளையன் என்ற பெயரில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த படம் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ரஜினியின் தங்கையாக இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
படம் வெளியான தொடக்கத்தில் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் வசூலில் படம் தாறுமாறான சாதனை படைத்தது. உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களை தவிடு பொடியாக்கியது. தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த படம் இன்றுடன் வெளியாகி 21 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி அண்ணாத்த படத்தின் டிஜிட்டல் உரிமையை படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சன் நெக்ஸ்ட் நிறுவனமும், நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து இன்று இந்த இரண்டு ஓடிடி தளங்களிலும் அண்ணாத்த படம் வெளியாகியுள்ளது.
படம் வெளியான குறைந்த நாளிலேயே ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிம்பு நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த மாநாடு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் அண்ணாத்த படத்தை ஓடிடியில் வெளியிட்டதாக ஒருபுறம் பேசப்பட்டு வருகிறது.
இதுவரை போட்டி இல்லாமல் சோலோவாக ஸ்கோர் செய்த நிலையில் தற்போது போட்டியாக மாநாடு படம் களத்தில் இறங்கியதால் அண்ணாத்த படத்தை ஓடிடியில் வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.