தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலான நடை மற்றும் சிகரெட் பற்ற வைக்கும் வித்தை மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது ஸ்டைலுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். இவரது படங்களும் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை படைத்தது.
ஒரு கட்டத்தில் ரஜினி படம் வெளியாகும் சமயத்தில் மற்ற படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்கி வந்தனர். ஏனெனில் ரஜினியுடன் போட்டியிட அவர்கள் விரும்பவில்லை. அந்த காலகட்டத்தில் ரஜினி மிகவும் டாப் நடிகராக வலம் வந்தார். எனவே அவரை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.
ஆனால் ரஜினிக்கு போட்டியாக ஒருவர் மட்டும் களமிறங்கினார். அவர் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வரும் டி.ராஜேந்திரன் தான். அந்த சமயத்தில் டி.ஆர் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இவர் இயக்கத்தில் இவரே நடித்து வெளியான பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
அப்போதுதான் ரஜினிக்கு போட்டியாக டி.ஆர் களமிறங்கினார். அதாவது கடந்த 1983ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரஜினி நடித்த தங்கமகன் படம் வெளியானது. இந்நிலையில் அதே நாளில் டி.ஆர் இயக்கி நடித்திருந்த தங்கைக்கோர் கீதம் படத்தை ரஜினிக்கு போட்டியாக வெளியிட்டார். ரஜினியுடன் போட்டி போட முன்னணி நடிகர்களே தயங்கிய சமயத்தில் டி.ஆர் செய்த செயல் பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தற்போது கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியுடன், டி.ஆருக்கு பதில் அவரது மகன் சிம்பு போட்டியிட உள்ளார். அதாவது வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் அதே நாளில் தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர். தந்தையும், மகனும் இரண்டு தலைமுறைகளாக ரஜினியுடன் போட்டியிட்டு வந்தாலும், தற்போது வரை ரஜினி தனிக்காட்டு ராஜாவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.