ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீவித்யா. இவர் ஜோடி சேர்ந்து நடிக்காத ஹீரோக்களே இல்லை. இவர் கடந்த 1967ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.
பின்னர் டெல்லி டூ மெட்ராஸ் என்ற படம் மூலம் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமானார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் கதாநாயகி ஸ்ரீவித்யாதான். ஆனால் பிற்காலத்தில் அதே ரஜினிக்கு அம்மாவாகவும், மாமியாராகவும் ஸ்ரீவித்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 900 படங்களுக்கு மேல் நடித்த ஸ்ரீவித்யா திரையுலகில் யாரும் காணாத வெற்றி ருசித்தார். ஆனால் அவரது சொந்த வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. ஆரம்ப காலத்தில் நடிகர் கமல்ஹாசனை ஸ்ரீவித்யா காதலித்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.
பின்னர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த உறவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார் ஸ்ரீவித்யா. பின்னர் திரையுலகில் தான் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு அறக்கட்டளை தொடங்கிய ஸ்ரீவித்யா இசைப்பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.
ஆனால் அவரது இசைப்பள்ளியில் அவருடன் பார்ட்னராக இருந்த நபர் ஸ்ரீவித்யாவை ஏமாற்றி துரோகம் செய்து விட்டார். அதனால் தனது சொத்துக்களை இழந்து வறுமையில் வாடிய ஸ்ரீவித்யாவிற்கு கொடிய நோயான கேன்சர் ஏற்பட்ட போது மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தார். 2003ஆம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா 2006 ஆம் ஆண்டு கேன்சருடன் போராடி உயிரை விட்டார்.