நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள படம் தான் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும். ஓடிடியில் வெளியாகி உள்ள இப்படத்தில் ரம்யா பாண்டியன் மற்றும் மிதுன் மாணிக்கம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனரின் கதாபாத்திர தேர்வு பாராட்டிற்குரியது. அனைவரும் தங்களின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
கிராமத்தையும், அந்த சூழலையும் ஒளிப்பதிவாளர் படமாக்கியுள்ள விதம் நம்மை அந்த கிராமத்திற்கே அழைத்து செல்கிறது. கதைப்படி ரம்யா பாண்டியன், மிதுன் மாணிக்கத்தை திருமணம் செய்யும் போது அவர் வளர்த்து வந்த கருப்பன், வெள்ளையன் என்ற இரண்டு மாடுகளை சீதனமாக எடுத்து செல்கிறார்.
மிதுன் மாணிக்கமும், ரம்யா பாண்டியனும் கருப்பன், வெள்ளையனை குழந்தைகளை போல் வளர்த்து வருகிறார்கள். ஒரு நாள் கருப்பன், வெள்ளையன் இருவரும் காணாமல் போகின்றன. இறுதியில் கருப்பன், வெள்ளையனை மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் இருவரும் கண்டு பிடித்தார்களா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
மிதுன் மாணிக்கம் அறிமுக நடிகர் என்ற பதற்றம் இல்லாமல் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பு சிறப்பு. நண்பனாக வரும் வடிவேல் முருகன், செய்தியாளராக வரும் வாணி போஜன் என அனைவரும் அவர்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார்கள். மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான பாசத்தை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டிற்குரியது.
மாடுகளை வைத்து அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமான கதை களத்தை கையில் எடுத்துள்ளார்கள். படம் சோசியல் மீடியாவில் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரசிகர்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.