70 களின் பிற்பகுதியில் தன்னுடைய இசை பயணத்தை ஆரம்பித்த இளையராஜா இப்போது வரை பல இன்னிசை பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் 80 காலகட்டத்தில் இளையராஜாவின் ஆட்சிதான் என்று சொல்லும் அளவுக்கு அவர் இசை இல்லாமல் எந்த படங்களும் வெளிவருவது கிடையாது.
அந்த அளவுக்கு அனைத்து இயக்குனர்களும் இவர் தான் இசையமைக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். அந்த வகையில் இளையராஜா மற்றும் கே பாலச்சந்தரின் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
சிந்து பைரவியில் ஆரம்பித்த அவர்களுடைய கூட்டணி புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, மனதில் உறுதி வேண்டும், புது புது அர்த்தங்கள் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ந்தது. இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய நட்பு ஒரு சிறு பிரச்சினையின் காரணமாக முறிந்தது.
அதாவது 1989 தீபாவளி அன்று நான்கு படங்கள் ரிலீஸ் ஆனது. ரஜினியின் மாப்பிள்ளை, கமலின் வெற்றி விழா, விஜயகாந்தின் தர்மம் வெல்லும், சத்யராஜின் வாத்தியார் வீட்டு பிள்ளை போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுடன் கே பாலச்சந்தரின் புதுப்புது அர்த்தங்கள் படமும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.
அதனால் பாலச்சந்தர் இளையராஜாவிடம் இந்த படத்தின் பின்னணி இசையை முடித்துக் கொடுக்க சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால் இளையராஜா எனக்கு நான்கு படங்கள் இருக்கிறது அதனால் முடியாது என்று மறுத்துள்ளார். இந்த சிறு பிரச்சனை அவர்களுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது.
பிறகு எப்படியோ குறித்த நேரத்தில் அந்த படம் ரிலீஸானாலும் பாலச்சந்தர் அதன் பிறகு தன்னுடைய படங்களில் இளையராஜாவை தவிர்த்து விட்டு வேறு இசையமைப்பாளரை புக் செய்ய ஆரம்பித்தார். சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் இளையராஜாவால் மட்டும் தான் நல்ல இசையை தர முடியும் என்று இயக்குனர்கள் மத்தியில் ஒரு கருத்து இருந்தது.
அதை உடைத்து காட்டிய பெருமையும் பாலச்சந்தருக்கு உண்டு. முதன்முதலாக இளையராஜாவை எதிர்த்தவரும் அவர்தான். அதன் பிறகு தான் மற்ற இயக்குனர்கள் இளையராஜா இல்லாமலும் படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு தான் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார்கள்.