தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஏனென்றால் இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக் களத்தையும், பிரம்மாண்டத்தையும் கொண்டிருக்கும்.
இதன் காரணமாக வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகரும் ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டுமென்பதை தங்களது லட்சியமாகக் கொண்டுள்ளனர். அதேபோல், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களை பார்ப்பதற்காக தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது.
சமீபத்தில் இயக்குனர் ஷங்கரின் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதாவது ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம்தான் ‘எந்திரன்’ முதல் பாகம். இந்தப் படம் கதாசிரியர் ஆரூர் எழுதிய ‘ஜூகிபா’ என்ற கதையில் இருந்து திருடப்பட்டது என்று ஹை கோர்ட்டில் கேஸ் போடப்பட்டது. மேலும் ஷங்கரும் தயாரிப்பு நிறுவனமும் இந்தக் கேஸை தள்ளுபடி செய்ய பல முயற்சிகள் எடுத்தும் அவை அனைத்தும் தோற்றன. இதற்காகத்தான் ஷங்கர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன.
இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றம் சங்கருக்கு எதிராக பிடிவாரன்ட் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் எழும்பூர் நீதிமன்றம் தனக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இணையத்தில் தினசரி நீதிமன்ற நிகழ்வுகளை பதிவேற்றும் போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஷங்கர். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.