திலீப் மோகன்லால் அதிரடி ஆட்டம் எப்படி? பா பா பா விமர்சனம்
முதலமைச்சரை கடத்தும் ஒரு இளைஞனின் துணிச்சலான பயணமும், அதன் பின்னணியில் உள்ள ரகசியங்களுமே 'பா பா பா'. திலீப்பின் டைமிங் காமெடி மற்றும் மோகன்லாலின் மாஸ் என்ட்ரி என இப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் ஆகும்.
மலையாள சினிமாவின் 'ஜனப்ரியா நாயகன்' திலீப் மற்றும் 'கம்ப்ளீட் ஆக்டர்' மோகன்லால் இணைந்து நடித்துள்ள பா பா பா (Bha Bha Ba) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை, அரசியல் மற்றும் அதிரடி கலந்த ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கேரள மாநிலத்தின் முதலமைச்சர் ஜோசப் (பைஜூ சந்தோஷ்) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவர் மீண்டும் நலமுடன் திரும்பி, ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கிறார்.
முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக கமிஷனர் தேவ் மற்றும் அசிஸ்டன்ட் கமிஷனர் அஸ்கர் தலைமையிலான போலீஸ் படை தீவிரமாகச் செயல்படுகிறது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, ஒரு சாதாரணத் தொண்டனைப் போல கூட்டத்திற்குள் நுழையும் திலீப், மிகுந்த சாமர்த்தியத்துடன் முதலமைச்சரையே கடத்திச் செல்கிறார்.
இதனால் மாநிலமே ஸ்தம்பித்துப் போகிறது. முதலமைச்சரின் மகன் நோபல், தன் தந்தையை மீட்க களமிறங்குகிறார். கடத்தப்பட்ட முதலமைச்சருடன் திலீப் பயணிக்கும்போது, எதிர்பாராத விதமாக சரண்யா பொன்வண்ணனும் அவர்களுடன் இணைகிறார். ஒரு வித்தியாசமான முதியோர் இல்லத்திற்கு முதலமைச்சரை அழைத்துச் செல்லும் திலீப், ஒரு பழைய ஆடியோ கேசட் மூலம் முதலமைச்சரின் மகனுக்கு சவால் விடுகிறார்.
"நீயாகவே என்னை விடுவித்து, மீண்டும் அழைத்துச் செல்வாய்" என முதலமைச்சர் ஜோசப் சவால் விட, திலீப்பின் பின்னணி என்ன என்பதும், அவர் ஏன் இந்த ஆபத்தான காரியத்தில் இறங்கினார் என்பதுமே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு திலீப் மற்றும் மோகன்லால் ஆகிய இரு பெரும் ஆளுமைகளை ஒரே திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. மோகன்லாலின் கேமியோகதையின் போக்கையே மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சரண்யா பொன்வண்ணன் மற்றும் திலீப் இடையேயான நகைச்சுவை காட்சிகள் திரையரங்குகளில் சிரிப்பலைகளை உருவாக்குகிறது. அதே சமயம், படத்தின் இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.
திலீப்பின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், மலையாள அரசியலை நையாண்டி செய்யும் வசனங்களும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஒரு பிரம்மாண்டமான உணர்வைத் தருகிறது.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3.25/5
