வா வாத்தியார் விமர்சனம்.. எம்ஜிஆர் ஸ்டைல் கார்த்திக்கு வேலை செய்ததா?
கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படம், எம்.ஜி.ஆர் விசுவாசத்தையும் கமர்ஷியல் அரசியலையும் பேசுகிறது. இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா அல்லது ஏமாற்றியதா என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் சூது கவ்வும் படத்தின் மூலம் ஒரு புதிய அலைவரிசையை உருவாக்கியவர் இயக்குநர் நலன் குமாரசாமி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கார்த்தியுடன் இணைந்திருக்கும் திரைப்படம் 'வா வாத்தியார்'. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, ஒருவழியாக இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
மாசிலா என்கிற ஊரில் தீவிர எம்.ஜி.ஆர் பக்தராக வாழ்கிறார் ராஜ்கிரண். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்த அதே தருணத்தில் அவருக்குப் பேரன் பிறக்கிறான். தன் தலைவனின் மறுபிறப்பாகவே அந்தப் பேரனைப் பார்க்கும் ராஜ்கிரண், அவனுக்கு எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும், ஒழுக்கத்தையும் ஊட்டி வளர்க்கிறார். அந்தப் பேரன் தான் நாயகன் கார்த்தி.
தன் தாத்தா ஆசைப்பட்டபடி 'வாத்தியார்' காட்டிய நல்வழியில் கார்த்தி நடக்கிறாரா? ஊர் அரசியலும், இன்றைய கால மாற்றங்களும் அந்த எம்.ஜி.ஆர் விசுவாசியை எப்படி மாற்றுகிறது? என்பதுதான் படத்தின் ஒன்லைன். நலன் குமாரசாமியின் முந்தைய படங்களைப் போல இதிலும் ஒரு 'டார்க் ஹியூமர்' (Dark Humor) கலந்த திரைக்கதையை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமா அல்லது கொண்டாட்டமா என்பதே எஞ்சிய கதை.
நாயகன் கார்த்தி எப்போதும் கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்துபவர். இதில் எம்.ஜி.ஆரின் உடல்மொழி மற்றும் சாயலை வெளிப்படுத்த அவர் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. இருப்பினும், திரைக்கதையில் உள்ள தொய்வு அவரது கதாபாத்திரத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது. நாயகி க்ரித்தி ஷெட்டிக்கு இந்தப் படத்தில் பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும், பாடல்களிலும் ஒரு சில காட்சிகளிலும் வந்து செல்கிறார்.
மூத்த நடிகர்களான ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் படத்தின் பெரும் பலம். குறிப்பாக ராஜ்கிரண் பேசும் வசனங்கள் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளன. சத்யராஜின் கதாபாத்திரம் மற்றும் அவரது லுக் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருணாகரன் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்குப் பலம் சேர்க்கிறது. குறிப்பாகப் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்த விதமும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கமர்சியல் படத்திற்குத் தேவையான தரத்தில் உள்ளது. 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' போன்ற கிளாசிக் பாடல்களைப் பயன்படுத்திய விதம் திரையரங்கில் கைத்தட்டல்களைப் பெறுகிறது.
பிளஸ் கார்த்தியின் அர்ப்பணிப்புள்ள நடிப்பு. ராஜ்கிரண் - கார்த்தி இடையேயான தாத்தா-பேரன் உறவு. ஆங்காங்கே தெறிக்கும் நலன் குமாரசாமி பாணி வசனங்கள். மைனஸ் தெளிவற்ற திரைக்கதை மற்றும் மெதுவான வேகம். முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் குறைவது. எம்.ஜி.ஆர் காலத்து சென்டிமென்ட்கள் இன்றைய இளைய தலைமுறைக்குச் சரியாகக் கனெக்ட் ஆகாதது.
நலன் குமாரசாமி போன்ற ஒரு மேதையான இயக்குநரிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரு புதுமையான திரைக்கதை மாற்றத்தைத்தான். ஆனால், 'வா வாத்தியார்' படத்தில் கமர்சியல் மசாலாவைத் தூக்கலாகத் தூவி, கதையின் ஆழத்தைக் குறைத்துவிட்டாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இடைவேளைத் திருப்பம் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், கிளைமாக்ஸ் வரை அந்த வேகம் நீடிக்கவில்லை.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5
