குற்றவாளியைத் தேடும் வேட்டை! குற்றம் புரிந்தவன் விமர்சனம்
SonyLIV தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'குற்றம் புரிந்தவன்' தமிழ் வெப் சீரிஸின் முழுமையான, நடுநிலையான விமர்சனம்.
நடிகர் பசுபதி, வித்தார்த், மற்றும் லட்சுமி பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'குற்றம் புரிந்தவன்' (Kutram Purindhavan) வெப் சீரிஸை இயக்குநர் செல்வமணி இயக்கியுள்ளார். மொத்தம் 7 எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடர், ஒரு கொலையும், அதைத் தொடர்ந்து காணாமல் போகும் ஒரு சிறுமியும் அடங்கிய மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது. ஒரு சாதாரண மனிதன், ஒரு எதிர்பாராத சம்பவம், மற்றும் காவல்துறையின் விசாரணை எனப் பல அடுக்குகளைக் கொண்ட இதன் கதைக்களம் பார்வையாளர்களைக் கடைசி வரை கட்டிப்போடுகிறதா? அல்லது சோர்வடையச் செய்கிறதா? பார்ப்போம்.
அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணிபுரியும் பசுபதி, தன் மனைவி மற்றும் பேரனுடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர் ஊரில் கஷ்டப்படுபவர்களுக்கு அவ்வப்போது உதவும் நல்ல மனம் கொண்டவர். திருவிழா நேரத்தில், அவரது குடியிருப்பின் அருகிலேயே வசிக்கும் சால்மன் என்பவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், சால்மனின் 12 வயது மகள் மெர்சியையும் காணவில்லை.
ஒரு கொலையும், ஒரு காணாமல் போன குழந்தையும் என அடுக்கடுக்கான மர்மங்கள் எழ, இந்த வழக்கை விசாரிக்க காவல்துறை வருகிறது. சால்மனை கொன்றது யார்? சிறுமி மெர்சிக்கு என்ன ஆனது? என்கிற கேள்விகளுக்கான விடைகளை, எதிர்பாராத திருப்பங்களுடன் (Twists) இந்தப் புலனாய்வுக் கதை சொல்கிறது. குற்றவாளியைத் தேடும் இந்த வேட்டையில், ஒவ்வொரு எபிசோடிலும் புதிய முடிச்சுகள் அவிழ்கின்றன.
இந்த சீரிஸின் அசைக்க முடியாத தூணாக நிற்பவர் நடிகர் பசுபதிதான். சீரிஸை முழுக்க முழுக்கத் தன் தோளில் சுமக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு மருந்துக்கடையில் வேலை செய்யும் சாதாரண மனிதராக, தன் குடும்பத்தின் மீது பாசம் கொண்டவராக, ஊர் மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவராக அவர் வரும் காட்சிகள் எல்லாமே மிகவும் இயல்பாக இருக்கின்றன.
கொலைச் சம்பவம் அவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும்போது, அவர் காட்டும் பதற்றம், பயம், மற்றும் தன்னை நிரூபிக்கப் போராடும் விதம் ஆகியவை 'பர்ஸ்ட் கிளாஸ்' நடிப்பை வெளிப்படுத்துகின்றன. அவரது உடல்மொழி, கண்களின் அசைவுகள் என எல்லாமே அவரின் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. ஒரு சில இடங்களில், 'இவர்தான் குற்றவாளியோ' என்று பார்வையாளர்களைச் சந்தேகிக்க வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு அழுத்தமாக உள்ளது.
நடிகர் விதார்த், காவல் துறை அதிகாரியாக வருகிறார். ஆரம்ப எபிசோடுகளில் இவருக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லாதது போலத் தோன்றினாலும், கதை சூடுபிடிக்கும் மூன்றாவது எபிசோடில் இருந்து, குறிப்பாக கடைசி மூன்று எபிசோடுகளில், அவர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ஒரு நேர்மையான, ஆனால் அழுத்தமான அதிகாரியாக அவர் விசாரணை செய்யும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. அவரது விசாரணை பாணி, அழுத்தமான முகபாவங்கள் ஆகியவை திரைக்கதைக்குக் கூடுதல் சுவாரஸ்யம் சேர்க்கின்றன.
இயக்குநர் செல்வமணி, முதல் எபிசோடிலேயே நேரடியாகக் கதைக்குள் நுழைந்து விடுகிறார். இது ஒரு நேர்மறை அம்சம். திரைக்கதை அடுத்தடுத்து அடுக்கும் திருப்பங்கள் இரண்டாவது எபிசோடின் இறுதி வரை பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. இதுவே, இந்த சீரிஸின் பெரிய பலம்.
ஆனால், மூன்றாவது மற்றும் நான்காவது எபிசோடுகள் மட்டும் ஒரு சிறிய சறுக்கலைச் சந்திக்கின்றன. ஒரே இடத்தில், ஒரே விஷயத்தை நமக்குக் கடத்த, அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இது பார்ப்பவர்களுக்கு ஒரு சிறிய சலிப்பைத் தரலாம். இந்தப் பகுதிகளை இன்னும் கிரிஸ்பாக, விரைவாகக் கடந்து சென்றிருக்கலாம்.
மொத்தத்தில், விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் தொடர்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த 'குற்றம் புரிந்தவன்' நிச்சயமாக ஒரு நல்ல விருந்துதான்.
சினிமா பேட்டை ரேட்டிங் : 3.5/5
