1. Home
  2. விமர்சனங்கள்

காட்டுக்குள் நடக்கும் மர்ம வேட்டை.. எகோ விமர்சனம்

eko-movie-review

‘கிஷ்கிந்தா காண்டம்’ படப் புகழ்பெற்ற தின்ஜித் அய்யதன் இயக்கத்தில், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘எகோ’ (Eko) திரைப்படம், ஒரு மர்மமான காணாமல் போதல் மற்றும் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான விசித்திரமான உறவை மையமாகக் கொண்ட ஒரு சிலிர்ப்பூட்டும் த்ரில்லர் அனுபவமாகும்.


மலையாளத் திரையுலகம் சமீபகாலமாக உலகத்தரம் வாய்ந்த த்ரில்லர் படங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், ‘த்ரிஷ்யம்’ படத்திற்கு இணையான விறுவிறுப்புடன், மனித மனதின் இருண்ட பக்கங்களையும் அதிகாரப் போக்கையும் பேசும் படமாக உருவெடுத்துள்ளது ‘எகோ’ (Eko). தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

கேரள - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஒரு தனிமையான மலைப்பகுதி. அங்குள்ள எஸ்டேட் உச்சியில் மலாத்தி (பியானா மொமின்) என்ற மலேசியப் பெண் வசித்து வருகிறார். அவரது கணவர் குரியச்சன் (சவுரப் சச்தேவா) ஒரு பெரும் தொழிலதிபர். ஆனால், ஊருக்குள் அவர் ஒரு பெண் பித்தராகவும், எதற்கும் அஞ்சாத கொடூரமான மனிதராகவுமே அறியப்படுகிறார். எப்போதாவது ஒருமுறை மலாத்தியைச் சந்திக்க வரும் குரியச்சன், அவருக்குத் துணையாகவும் பாதுகாப்பிற்கும் பியூஷ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞனைப் பணியில் அமர்த்தியுள்ளார்.

இந்த அமைதியான சூழலில், மோகன் போத்தன் (வினித்) தனது நாயுடன் அந்த எஸ்டேட்டிற்கு வருகிறார். குரியச்சனைத் தேடி வரும் அவர் அங்கு ஒரு கூடாரம் அமைத்துத் தங்குகிறார். திடீரென ஒரு திருப்பமாக வினித் இறந்துவிட, அதைத் தொடர்ந்து அவிழும் மர்ம முடிச்சுகள்தான் படத்தின் திரைக்கதை. ஒரு தொழிலதிபர் மாயமானது ஏன்? வினித்தின் வருகைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்குப் படம் விடை சொல்கிறது.

ஏற்கெனவே ‘கிஷ்கிந்தா காண்டம்’ என்ற மாபெரும் வெற்றியைத் தந்து, ரசிகர்களை மிரள வைத்த இயக்குனர் தின்ஜித் அய்யதன், இப்படத்தில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாகுல் ரமேஷின் கேமரா கோணங்கள், அடர்ந்த காட்டின் அழகையும் அதே சமயம் ஒருவித அமானுஷ்ய பயத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்துகின்றன. குறிப்பாக, நாய்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் நம்மைப் பயத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

இப்படத்தின் மிக முக்கியமான அம்சம் 'நாய்கள்'. அரிதான வகை நாய்களை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் தொழிலை குரியச்சன் செய்து வருகிறார். "பாதுகாப்பு" என்ற பெயரில் மனிதர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களை எப்படி அடிமைப்படுத்தி வைக்கிறார்கள் என்பதையே இந்தப் படம் ஆழமாகப் பேசுகிறது. நாய்களை எஜமானர்கள் கட்டுப்படுத்துவது போல, குரியச்சன் மலாத்தியைக் கட்டுப்படுத்துகிறார். "நில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளிதான்" என்ற வசனம் படத்தின் மையக்கருத்தை (Theme) மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

ஒரே உண்மை, ஆனால் ஆளாளுக்கு ஒருவிதமாகப் பார்ப்பதுதான் இந்தத் திரைக்கதையின் பலம். ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியை குரியச்சன் விவரிக்கும் விதம் ஒன்று, அதே காட்சியை அவரது நண்பர் வினித் விவரிக்கும் விதம் வேறொன்று. இந்த 'பார்ஸ்பெக்டிவ்' விளையாட்டு பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது. 'ஃபேலிமி' படத்தில் சாதுவான இளைஞனாகப் பார்த்த சந்தீப் ப்ரதீப், இதில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார்.

அதிகார மனப்பான்மை கொண்ட மனிதர்கள், பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பதற்காகத் தரும் 'பாதுகாப்பு' எனும் மாயவலை எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. உணர்வுபூர்வமான காட்சிகள் ஒருபுறம், மிரட்டும் த்ரில்லர் காட்சிகள் மறுபுறம் என ஒரு கச்சிதமான கலவையை இயக்குனர் கொடுத்துள்ளார். ஒரு சிறந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரைத் தேடுபவர்களுக்கு 'எகோ' ஒரு சரியான தேர்வு.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.