சல்லியர்கள் திரை விமர்சனம்.. ஈழத்தின் போர்முனை மருத்துவம்!
மேதகு படத்தின் இயக்குனர் டி.கிட்டு இயக்கத்தில், ஈழப் போர்க்களத்தில் உயிரைக் காக்கப் போராடிய மருத்துவர்களின் தியாகத்தை விவரிக்கும் 'சல்லியர்கள்' திரைப்படம் தற்போது OTT Plus தளத்தில் வெளியாகியுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் ரத்தமும் கண்ணீரும் கலந்த வரலாற்றில், ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கு இணையாக, உயிரைக் காக்கும் கருவியைச் சுமந்த மருத்துவர்களின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் விரிவாகப் பேசப்பட்டதில்லை. அந்தப் பெருங்குறையைத் தீர்க்கும் முயற்சியாக இயக்குநர் டி.கிட்டு உருவாக்கியுள்ள திரைப்படம் தான் சல்லியர்கள்.
இலங்கை இனப்படுகொலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பதுங்கு குழிகளையே மருத்துவமனைகளாக மாற்றி, கொட்டும் குண்டுகளுக்கு மத்தியில் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் வாழ்வியலை இந்தப் படம் பேசுகிறது. போர் தர்மத்தையும் தாண்டி, தன்னிடம் காயமடைந்து வரும் எதிரி நாட்டு வீரனுக்கும் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவரின் அறத்தை மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
இப்படத்தின் மிகப்பெரிய பலம் நாயகி சத்யாதேவி. ஐடி துறையில் கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர், இந்தப் பாத்திரத்திற்காக வேலையைத் துறந்து அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். ஒன்றரை மாத கால கடினப் பயிற்சியும், காயங்களுக்குத் தையல் போடுவதற்காக நிஜ இறைச்சியைக் கொண்டு அவர் மேற்கொண்ட பயிற்சியும் திரையில் பிரதிபலிக்கிறது. ஒரு தேர்ந்த மருத்துவர் போலவே அவர் காட்சியளிப்பது படத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
வழக்கமான அதிரடி பாத்திரங்களில் தோன்றும் மகேந்திரன், இதில் அமைதியான, பொறுப்பான மருத்துவராக ஆச்சரியப்படுத்துகிறார். நடிகர் கருணாஸ், தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக, தனது மகனிடம் "தலைகுனிந்து சாகாதே" என்று அவர் கூறும் வசனம் தியேட்டரில் இருந்திருந்தால் விசில் பறந்திருக்கும், இப்போது ஓடிடியில் பார்ப்பவர்களையும் கண் கலங்க வைக்கிறது.
போர் மருத்துவம் சார்ந்த கதையைத் துணிச்சலாகத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்குப் பாராட்டுகள். கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோரின் இசை போர்க்களத்தின் வலியையும், தியாகத்தின் ஆழத்தையும் சரியாகக் கடத்துகிறது. குறைந்த பட்ஜெட்டில் போர்ச் சூழலை நேர்த்தியாகப் படமாக்கிய ஒளிப்பதிவு கவனிக்கத்தக்கது.
சில இடங்களில் ஆவணப்படம் போன்ற உணர்வைத் தருவதால், திரைக்கதையின் வேகம் சற்று குறைகிறது. போர் காட்சிகளில் சிஜி மற்றும் பிரம்மாண்டம் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஈழப் போராட்டத்தின் மற்றொரு பக்கத்தைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட உருக்கமான படங்களை ரசிப்பவர்களும் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம். இது வெறும் படம் மட்டுமல்ல, போர் முனையில் மடிந்த மற்றும் வாழ்ந்த தியாகிகளின் சாட்சியம்.
சினிமாபேட்டை ரேட்டிங்: 3.5 / 5
