1. Home
  2. விமர்சனங்கள்

ஸ்டீபன் விமர்சனம்: OTT-ல் பயமுறுத்தும் ஒரு சைக்கோ திரில்லர்

stephen movie review
திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் 'ஸ்டீபன்' திரைப்படம், பார்வையாளர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றுள்ளது. 9 பெண்களைக் கொலை செய்துவிட்டுத் தானே காவல் நிலையம் சென்று சரணடையும் சைக்கோ கொலைகாரனைப் பற்றிய இந்தக் கதை, இரண்டு மணி நேரத்தில் ஷாக் ட்விஸ்டுகளை அடுக்கி ஒரு பக்காவான திரில்லர் அனுபவத்தை அளிக்கிறது.

இயக்குநர் மிதுன் இயக்கத்தில் உருவான 'ஸ்டீபன்' திரைப்படம், OTT ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு வழக்கமான க்ரைம் படமாக இல்லாமல், சைக்கோ கொ..லையாளியின் உளவியல் மற்றும் அவனது கடந்த காலத்தை விசாரணைக் கோணத்தில் அணுகியுள்ள விதம்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

கதைக்களம்: மர்மமான சரணடைவு

9 பெண்களைக் கொடூரமாகக் கொன்ற ஒரு சைக்கோ கொ..லையாளி (கோமதி சங்கர்), தனது 10-வது கொ.லையைச் செய்யத் திட்டமிடுகிறார். ஆனால், தான் கொல்லத் தேர்ந்தெடுத்த பெண் சொன்ன ஒரே ஒரு வார்த்தையால், அவளைக் கொல்லாமல் விட்டுக் கொடுத்துவிட்டு, பின்னர் தானே சென்று காவல் நிலையத்தில் சரணடைகிறான். போலீஸ் அவனை விசாரிக்கும்போதுதான், அவன் ஏற்கனவே அம்மா, அப்பா, மனைவி என மேலும் மூன்று பேரைக் கொன்றதும் தெரிய வருகிறது. ஏன் சரணடைந்தான்? என்ற ஒற்றைக் கேள்விக்கான விடையே மீதிக்கதை.

திரைக்கதையின் வலிமை (இயக்குநரின் கைவண்ணம்)

இயக்குநர் மிதுன், இந்தப் படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய அணுகுமுறையைக் கையாண்டுள்ளார். காவல் துறை துப்பறிந்து, ஆதாரங்களைக் கண்டுபிடித்துக் கதையை நகர்த்துவதற்குப் பதிலாக, சைக்கோ கொ..லையாளியே விசாரணையின்போது எல்லா உண்மைகளையும் மிகச் சாதாரணமாக வெளிப்படுத்துகிறார். இதனால், ரசிகர்களுக்கு ஷாக் மேல் ஷாக் காத்திருக்கிறது. பத்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து, கதைக்கான 'நிறக் குறியீடுகள்' (Colour Symbolism) மூலமாகவும் கூடக் கதை சொல்ல முயன்றிருப்பது சிறப்பு.

இசையும் ஒளிப்பதிவும்:

இசையமைப்பாளர் ராகவ் ராயன், சைக்கோ திரில்லர் படங்களுக்கான இலக்கணத்தை உணர்ந்து, தேவையற்ற பின்னணி இசையைத் தவிர்த்து, பெரும்பாலான காட்சிகளில் நிசப்தம் மூலம் பயத்தைக் கூட்டியிருப்பது படத்திற்குப் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர், குறைவான பட்ஜெட்டிலும் கூட திகிலைத் தூண்டும் விதமான கேமரா கோணங்களைக் (Camera Angles) கையாண்டு, படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளார்.

கோமதி சங்கரின் நடிப்பு:

சைக்கோ கொ..லையாளியாக நடித்திருக்கும் கோமதி சங்கர், தனது உடல் மொழி, முக பாவனை மற்றும் வசன உச்சரிப்பு (Dialogue Delivery) மூலம் உண்மையான பயத்தை உணர்த்தியுள்ளார். அவரது மேக்-அப்பும், நிதானமான நடிப்பும் காலத்தால் பேசப்படும் சைக்கோ கொ..லையாளி கதாபாத்திரமாக உருவாகியுள்ளது. அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உணர்வுப்பூர்வமானவை.

கிளைமாக்ஸ் & அடுத்த பாகத்திற்கான லீட்:

படத்தின் உச்சக்கட்டக் காட்சி யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவைக் கொண்டிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. மேலும், படத்தின் கதைக்குள் இருந்தே 'ஸ்டீபன் பாகம் 2'க்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது, இது இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மொத்தத்தில், இரண்டு மணி நேரத்தில் ஒரு தரமான, பக்காவான சைக்கோ திரில்லர் படத்தைப் பார்க்க விரும்பும் OTT ரசிகர்களுக்கு 'ஸ்டீபன்' ஒரு சிறந்த விருந்தாக இருக்கும்.

Rating: 3.75/5

Cinemapettai Team
Vijay V

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.