இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 4-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வெறும் 11 ரன்களை மட்டுமே அடித்த ரோகித் சர்மா இம்முறை சதம் விளாசி அரங்கத்தை அதிர வைத்தார். ஒருமுறை கூட அயல்நாட்டில் சதம் அடிக்காத ரோஹித் சர்மாவை பலரும் விமர்சித்து வந்தனர். இதற்கு முன் இவர் அடித்த அனைத்து சதங்களுமே இந்திய மண்ணில்தான்.
ரோகித் சர்மா இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே ஆடி வந்தாலும் சதம் மட்டும் அடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். ஆனால் இந்த போட்டியில் வாய்ப்பை தவறவிடாமல் மொயின் அலி வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து ஓவல் மைதானத்தில் சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியாவில் மட்டும் தான் ரோகித் சிறப்பாக ஆடுவார் வெளிநாட்டு தொடர்களில் ஆட மாட்டார் என்ற ஒரு பேச்சு பரவலாக இருந்து வந்தது. ஆனால் அதையெல்லாம் இந்த முறை ரோகித் சர்மா பொய்யாக்கி விட்டார். இவர் அடித்த சதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் ஆட்டம் எடுபடவில்லை அவர் ஒருநாள் போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார் என பலரும் விமர்சித்து வந்த நிலையில் சதத்தின் மூலம் அனைவரது விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.