சினிமாவை பொருத்தவரை எந்த படங்கள் ஓடும் எந்த படங்கள் ஓடாது என நம்மால் கணிக்கவே முடியாது. பெரிய இயக்குனர் மாஸ் ஹீரோ என பிரம்மாண்ட கூட்டணியில் வெளியாகும் படம் திடீரென படுதோல்வியை சந்திக்கும். அதே நேரம் வளர்ந்து வரும் ஹீரோ நடிப்பில் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் நன்றாக ஓடி வசூல் மழையை பொழியும். இவை எல்லாம் ரசிகர்களின் மனநிலையை பொருத்தே அமையும்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் புதிதாக வசூல் சாதனை படைத்துள்ள குறைந்த பட்ஜெட் படம் தான் ருத்ர தாண்டவம். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்டு மற்றும் கெளதம் மேனன், தர்ஷா குப்தா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படம் வெளியாகி வெறும் மூன்றே நாளில் சுமார் 7.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் நிலவரம் தமிழக திரையரங்குகளில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ருத்ர தாண்டவம் படம் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தையே பெற்று கொடுத்துள்ளது. முன்னதாக இப்படத்தின் முதல் நாள் வசூல் 1.6 கோடி ரூபாய் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இயக்குனர் மோகன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரெளபதி படம் மொத்தமாக 4 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஆனால் அந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 45 லட்சம் ரூபாய் தானாம். குறைந்த முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்டுவதில் மோகன் கில்லாடியாக இருக்கிறார்.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பு அந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்ட வேண்டும். அப்போதுதான் அந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள். அந்த வகையில் ருத்ர தாண்டவம் படத்திற்கு படக்குழுவினருக்கு பதில் பிறர் விளம்பரம் செய்து படம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.