திரெளபதி படம் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தையே தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் மோகன் ஜி. இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ருத்ர தாண்டவம். திரெளபதி படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷியே இப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இவர் தவிர தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ருத்ர தாண்டவம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் டிரைலர் வெளியான சமயத்திலேயே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த நிலையில், தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கருத்து கூறியுள்ளார்கள் என்று பார்ப்போமா.
போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் இறங்கும் காவல் ஆய்வாளராக ருத்ர பிரபாகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் ரிச்சர்டு ரிஷி நடித்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக கொலை வழக்கு ஒன்றில் ரிச்சர்டு சிக்கிக் கொள்ள அதன் பின்னணியில் சாதிய பிரச்னை ஒன்று உருவாகிறது. பின்னர் தான் ஒரு குற்றமற்றவர் என்பதை அவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதே ருத்ர தாண்டவம் படத்தின் கதை.
நாயகனாக வரும் ரிச்சர்ட் தோற்றத்தில் ஈர்த்தாலும், நடிப்பில் சற்று சொதப்பியுள்ளார். அதேபோல் வில்லனாக வரும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வசனங்கள் பேசினாலும் நடிப்பில் சற்று தடுமாறியுள்ளார். ஆங்காங்கே சில ஹெலிகேம் ஷாட்கள் மூலம் படத்தை பிரம்மாண்டமாக காட்ட ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா முயற்சி செய்துள்ளார். ஜூபினின் பின்னணி இசை பரவாயில்லை.
ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர்கள் நடிப்பில் ஆங்காங்கே சில இடங்களில் சொதப்பி இருந்தாலும், படத்தின் கதை நன்றாக இருப்பதால் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையே படம் பெற்றுள்ளது. போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்னைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையப்படுத்தி படம் உருவாகி இருப்பது பாராட்டிற்குரியது.
படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் கமெண்ட்களையே பதிவு செய்து வருகிறார்கள். நிச்சயம் திரெளபதி படத்திற்கு கிடைத்த அதே வரவேற்பு ருத்ர தாண்டவம் படத்திற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.