ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநாடு. மேலும் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜெ. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்திருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் முழுவதையும் மொத்தமாக அவிழ்த்து விட்டுள்ளார்.
மாநாடு படம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘சிம்புவின் அழுத்தமான நல்ல கமர்சியல் படம் தான் மாநாடு. மேலும் இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு படமாகவும் இது இருக்கும். ஏனென்றால் நல்ல கருத்துக்களை எந்த அளவுக்கு சுவாரசியமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு வெங்கட்பிரபு ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஒரு சீரியஸான விஷயத்தை விளையாட்டாக சொல்லக்கூடிய கெட்டிக்காரர்கள் தான் வெங்கட்பிரபு. இந்தப் படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை சுற்றி இருக்கும் ஆபத்து எனக்கே தெரியாது அந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்.
எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும், ஆனால் அது தொடர்பான நிறைய படங்களை பண்ணவில்லை. மாநாடு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவே பிடித்த பிறகுதான் நடித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று தனது பேட்டியில் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிடும் போது தளபதியை சுற்றி ஆபத்தானவர்கள் இருப்பதாகவும் அது அவருக்கே தெரியும் என்பது போன்ற வெளிப்படையாக கூறியிருந்தார். அதேபோல் கதாபாத்திரம் மாநாடு படத்தில் தளபதியின் தந்தைக்கு அமைந்துள்ளது என்பதைக் கேட்டவுடன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ் ஏ சந்திரசேகர் இந்த படத்தில் முதலமைச்சராக நடித்துள்ளார் என்பது தான் இன்னும் சுவாரஸ்யம். இதனால் தனது அரசியல் ஆதங்கத்தை இந்த படத்தின் மூலம் சந்திரசேகர் வெளிக்கொண்டு வருகிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
ஏற்கனவே பல பிரச்சனைகளைத் தாண்டி முழு முயற்சியில் உருவாகிவரும் மாநாடு படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றி எஸ்.ஏ. சந்திரசேகர் விவரித்திருப்பது பட குழுவினரிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.