சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் சமூகத்தில் நடக்கும் சாதி ரீதியான அடக்கு முறைகளையும், வன்முறைகளையும் தோலுரித்து காட்டும் விதமாக படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் சாதி ரீதியான அடக்குமுறைகளை வெளிச்சம் போட்டு காட்டியது.
இதுதவிர மக்களின் நண்பனாக இருக்க வேண்டிய காவலர்களால் சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக விசாரணை, ஜெய்பீம் ஆகிய படங்கள் வெளியாகியது. தற்போது அந்த வரிசையில் ரைட்டர் படமும் இணைந்துள்ளது.
இயக்குனர் பிரான்க்லின் ஜேக்கப் இயக்கத்தில் பா ரஞ்சித் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரைடர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக ஒரு காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரிந்து வரும் சமுத்திரக்கனி பணி ஓய்வு பெறபோகும் சமயத்தில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது தான் ரைட்டர் படத்தின் கதை.
58 வயது சீனியர் அதிகாரியாக தொந்தியும் தொப்பையுமாகவும் இரண்டு மனைவிகளின் கணவனாகவும் சமுத்திரக்கனி அவரது கேரக்டரை மிக அருமையாக செய்திருக்கிறார். உயர் அதிகாரிகளுக்கு அடிபணிவது, பயப்படுவது என அவரின் நடிப்பில் அத்தனை எதார்த்தம். அவர் மட்டுமல்ல அனைவருமே அவர்களின் பணியை திறம்பட செய்துள்ளார்கள்.
மேலும் காவல்துறை அதிகாரிகளின் உணர்வுகளையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் உணர்த்தும் விதமாக ரைட்டர் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது மிக சிறப்பு. அதுமட்டுமின்றி என்னதான் காவலர்களை மக்கள் வெறுத்தாலும் அவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை படத்தில் அழுத்தமாக கூறியருப்பது பாராட்டிற்குரிய விஷயம்.
இப்படி சமுதாயத்திற்கு தேவையான ஒரு சமூக கருத்தை கூறியுள்ள ரைட்டர் படத்தை பார்த்த பல பிரபலங்கள் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வெகுவாக பாராட்டி உள்ளார்கள்.