தற்போது தமிழ் சினிமாவின் இயக்குனர், பின்னணி குரல் கொடுப்பவர், நடிகர் என சமுத்திரகனி எல்லா கதாபாத்திரத்திலும் பட்டையை கிளப்ப கூடிய ஒரு நடிப்பு பல்கலை கழகம். ஆரம்பத்தில் சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் சென்ற இடமெல்லாம் இவருக்கு நல்ல பெயர் தான். இயக்குனர் பாலச்சந்தர் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், பல தொலைக்காட்சி சீரியல்களில் பணியாற்றியவர்.
ரமணி VS ரமணி: சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த நகைச்சுவை சீரியல், கடந்த 1998ஆம் ஆண்டு ராஜ் டிவியில் துவங்கப்பட்ட முதல் சீசன் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதைத் தொடர்ந்து இரண்டாம் சீசன் 2001-ம் ஆண்டும் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலின் இரண்டாம் சீசனில் சிறு சிறு வேடங்களில் சமுத்திரகனி தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். இவருடன் ராம்ஜி, வாசுகி ஆனந்த், தேவதர்ஷினி, பிரித்விராஜ் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.
ஒரு கதவு திறக்கிறது: கடந்த 2001ஆம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் ராஜ் டிவியின் ஒளிபரப்பான பிரபல சீரியல் ஆன ‘ஒரு கதவு திறக்கிறது’ என்ற இந்த நெடும் தொடரிலும் சமுத்திரகனி குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றி தன்னுடைய ஆரம்பகால சினிமா பயணத்தை தொடங்கினார்.
அரசி: இவர் முதல் முதலாக 2003ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகி, அதன் பிறகு நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கி படு தோல்வியை சந்தித்ததால், மீண்டும் சீரியல் பக்கம் திரும்பினார். அப்பொழுதுதான் 2007ஆம் ஆண்டு ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்ற நெடும் தொடரை இயக்கும் வாய்ப்பைப் பெற்று சின்னத்திரையில் இயக்குனராக சமுத்திரகனி அறிமுகமானார். அதன்பின் தங்கவேட்டை என்ற விளையாட்டு ஷோவையும் இயக்கினார். அதைத்தொடர்ந்து அண்ணி என்ற மெகா தொடரையும் சமுத்திரகனி இயக்கினார்.
ஏழாம் வகுப்பு ‘C’ பிரிவு (7c): கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியின் துவங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் 352 எபிசோடுகளை கடந்த சூப்பர் ஹிட் சீரியல் ஆகும். கிராமத்து பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவிகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் சமுத்திரகனி கௌரவ வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இப்படி சினிமாவில் படிப்படியாக முன்னேறிய சமுத்திரக்கனி தன்னுடைய அசுர வளர்ச்சியால் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் விதத்தில் தெலுங்கு படங்களிலும் புக் ஆகி வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலியே இவரை தொடர்பு கொண்டு அவருடைய ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்கவும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.