தமிழ் சினிமாவில் உன்னைச் சரணடைந்தேன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சமுத்திரக்கனி அதனைத் தொடர்ந்து நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மக்களுக்கு நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் எடுத்துக் கூறுவதில் சமுத்திரக்கனியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது சமுத்திரகனி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனது தனித் திறமையை வெளிக் காட்டி வருகிறார் அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆலவைகுண்டபுரம்லோ படத்தில் வில்லனாக சமுத்திரகனி மிரட்டியிருப்பார். இதன் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து ரவி தேஜா நடிப்பில் வெளியான கிராக் திரைப்படத்திலும் சமுத்தரகனி வில்லனாக மிரட்டியிருந்தார்.
இதனால் தெலுங்கு சினிமாவில் சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்திலும், ஆகாசவாணி படத்திலும் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். மேலும், மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்க்காரு வாரி பாட்டா படத்திலும் சமுத்திரக்கனி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக சமுத்திரகனி வலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.