புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பெண் காவலர்களின் நலனை காக்க தொடங்கப்பட்ட சானிட்டரி நாப்கின் வெண்டிங் மிஷின்கள்.. குவியும் பாராட்டுக்கள்! 

பெண் காவலர்களின் மன நலனையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு, கடலூரில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சி.அபினவ் ஐபிஎஸ் துவக்கி வைத்துள்ளார்.

அதாவது மாத சுழற்சி, அதை ஒட்டிய நாட்களில் பெண் காவலர்களுக்கு ஏற்படக்கூடிய மனரீதியான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, வேலை செய்யும்போது சானிட்டரி நாப்கின்களை சுலபமாக பெற, மாவட்ட காவல் அலுவலகம், ஆயுதப்படை வளாகம் என கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்கள், 6 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்களை வைக்க வழிவகை செய்துள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது பயன்படுத்தப்படும் வகையில் மொத்தம் 65 இடங்களில், ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் வெண்டிங் மெஷின் மூலம் சானிட்டரி நாப்கின் பெறும் வசதியை கடலூர் மாவட்ட எஸ் பி அபிநவ் துவக்கி வைத்துள்ளார். அதேபோல், இன்று முதல் இந்த முறை பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அந்த கருவிக்குள் செலுத்தும்போது, வெண்டிங் கருவியிலிருந்து ஒரு நாப்கின் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், வெளி சந்தையில் விற்கப்படும்  நாப்கின்களின் விலையை காட்டிலும், இந்த நாப்கின்களின் விலை மிகக் குறைவாக இருப்பதாக பெண் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், பணியில் இருக்கும்போது இதுபோன்ற ஒரு வெண்டிங் மிஷின் பணி செய்யும் காவல் நிலையத்திற்கு அருகில் கைக்கு எட்டும் வகையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும்  இதை  நடைமுறைப்படுத்திய எஸ் பி அபினவ் அவர்களுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் காவலர்கள் கூறுகின்றனர்.

Trending News