விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம் தனது திரைப் பயணத்தை தொடர்ந்தவர் நடிகர் சந்தானம். அதன் மூலம் கிடைத்த புகழ் காரணமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். ஒரு கட்டத்தில் கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேலுவுக்கு இணையாக முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.
ஒரு சமயத்தில் சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை உருவானது. அப்போது திடீரென இனி காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என சந்தானம் முடிவு செய்தார். அதன்படி ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். இருப்பினும் இவரது படங்களுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு இல்லை.
தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சபாபதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் படத்தை வெளியிட முடியாமல் போனது.
எனவே தற்போது சர்வர் சுந்தரம் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தை இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், வைபவி ஷிந்திலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.