தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் தான் சார்பட்டா பரம்பரை படம். வடசென்னை குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டுமின்றி பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
படத்தை மட்டும் அல்லாமல் இப்படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக டான்ஸிங் ரோஸ், டாடி, ரங்கன் வாத்தியார் போன்ற அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
இவர்களில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நபர் என்றால் ஆர்யாவின் நண்பராக கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சரவணவேல் தான். படம் தொடங்கியதில் இருந்து இறுதிவரை தனது நண்பன் நிச்சயம் வெற்றி பெறுவான் என ஆர்யா மீது முழு நம்பிக்கை வைத்து அவரை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்.
வாழ்க்கையில் கௌதம் போன்ற ஒரு நண்பனையாவது சம்பாதிக்க வேண்டும் என வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் மீம்களை தெறிக்க விட்டனர். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் சிறந்த பெயரை பெற்றிருந்தது. அதிலும் இவர் இந்த படத்தில் பேசிய ‘இங்க வாய்பின்றது நமக்கெல்லாம் அவ்ளோ சீக்கிரம் கெடச்சிட்றது கிடையாது.
இது நம்ம ஆட்டம், நீ ஏறி ஆடுடா இது நம்ம காலம் பாத்துக்கலாம்’ என்ற இவரது வசனம் மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் சரவண வேலின் முதல் படம் சார்பட்டா பரம்பரை தான் என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இவர் முதன் முறையாக நடித்த படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் தான். இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் பயிற்சிக்கு செல்லும் போது ரவுடி தான் கெத்து என்று சரவணவேலிடம் தான் சொல்வார். இந்த காட்சியின் புகைப்படத்தை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.