பெண்களை தாயாக பார்க்க வேண்டும், அவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள், பெண்மையை மதிக்க வேண்டும் என்று சினிமாவில் வசனங்கள் பேசினாலும் அவை எல்லாம் நிஜ வாழ்க்கையில் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று பாலியல் தொல்லை. இதற்கு இந்த சமுதாயத்தில் இன்று வரை முடிவு கிடைக்கவில்லை. இந்த பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவி மாங்காட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அந்த மாணவியின் தந்தை வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார்.
பிற்பகலில் தாயும் வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில் மாணவி தன்னுடைய அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை கேள்வியுற்ற போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் அந்த அறையை சோதனை செய்த போலீசார் மாணவி தன் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். இதில் மாணவி தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள்.
இதுக்கு மேல என்னால வாழ முடியாது, ரொம்ப வலிக்குது, எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமில்லை, என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, கனவில் கூட வந்து போகுது, படிக்க முடியல, இந்த சமுதாயத்தில் பாதுகாப்பே இல்லை.
என்னோட கனவு எல்லாம் போயிடுச்சு, அனைத்து பெற்றோர்களும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தங்கள் மகனுக்கு கற்றுத்தர வேண்டும், எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன், உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்ப கூடாது.
அம்மா போயிட்டு வரேன், பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளிக்கூடம் எப்போதும் பாதுகாப்பானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கோவையில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்காக அரசு எவ்வளவோ முயற்சி எடுத்தாலும் இது போன்ற நிகழ்வுகள் தொடரத்தான் செய்கிறது. நம்ம வீட்டுப் பெண்களைப் போல் மற்ற பெண்களையும் பார்க்கும் காலம் எப்பொழுது தான் வரும். எங்கே செல்கிறது மனிதம்?