தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ரெட்ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் இவர் வாங்கி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் போன்ற பல திரைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தற்போது கமல் இயக்கத்தில் வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் உரிமையையும் இவர் பெற்றுள்ளார்.
இதனால் அவர் தமிழ் சினிமாவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று பலரும் குறை கூறி வருகின்றனர். இதைப் பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருக்கும் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, உதயநிதி ஸ்டாலின் மூலம் தமிழ் சினிமா நல்ல நிலையில்தான் இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பல திரைப்படங்களின் பிரச்சனைகள் இப்பொழுது தீர்ந்துள்ளது.
அவருடைய இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். அதனால் தமிழ் சினிமா அவரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று பதிலளித்துள்ளார். சீமான் ஒரு இயக்குநராக, நடிகராக ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். அதனால்தான் அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அவர் உதயநிதிக்கு எதிராக பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் உதயநிதிக்கு ஆதரவாக பேசிய இந்த பேச்சு தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர் கூறியது தான் உண்மை என்று சினிமா வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வருகிறது.