தமிழ் சினிமாவில் எதார்த்த இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. சாமானிய மக்களின் வாழ்வியலை படமாக்குவதில் கைதேர்ந்தவர் என்றும் சொல்லலாம். இதுவரை கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலமாக விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் சீனு ராமசாமி அறிமுகப்படுத்தி வைத்தார். அதுமட்டுமல்லாமல் இப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளன. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் முதலில் வெளியாகும் என தெரிகிறது.
இப்படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்காக சீனு ராமசாமி கதைகள் எழுதி வைத்துள்ளார். அதில் ஒரு கதையில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தை முடித்த பின்னர் தான், தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தை சீனு ராமசாமி இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.