மிஸ்டர் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர். மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத்தந்த முதல் கேப்டன் தோனி!
கிரிக்கெட் வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே சற்றும் சுயநலம் இல்லாமல் நடந்து கொள்வார்கள். அந்த வகையில் மகேந்திர சிங் தோனி எப்பொழுதுமே ஒரு தன்னலமற்ற வீரராக இந்திய அணியில் விளங்கியவர். அணி வீரர்களுக்கு தேவையான நேரத்தில் ஆலோசனை வழங்குவது, அவர்களை ஊக்குவிப்பது, தனது அணிக்கு எது தேவையோ அதன் படி வழிநடத்திச் செல்வது என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டவர் தோனி. அவர் இந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்வதற்கு அவரின் சுயநலமற்ற கிரிக்கெட் வாழ்க்கையை காரணம். அந்த வகையில் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்த தோனியின் சுயநலமற்ற செயல்களை பார்க்கலாம்.
சௌரவ் கங்குலிகாக மகேந்திரசிங் தோனி: 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் மகேந்திரசிங் தோனி கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு கடைசி போட்டியாகும். அதனால் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் மகேந்திர சிங் தோனி, சவுரவ் கங்குலியை அழைத்து கேப்டன்ஷிப் செய்யவைத்து அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வழி அனுப்பியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
விராத் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி: 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் மகேந்திரசிங் தோனி காயம் காரணமாக ஓய்வெடுத்தார். அவருக்கு பதிலாக விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தினார் அதன்பின் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணியை வழிநடத்தி இலங்கைக்கு எதிரான போட்டியில் அணியை வெற்றி பெற வைத்து தொடரையும் கைப்பற்றினார். பின்னர் கோப்பையை பெரும் போது விராத் கோலியை அழைத்து பெறச்செய்தது ஒரு தன்னலமற்ற செயலாக பார்க்கப்பட்டது.
வலுவான இந்திய அணியை உருவாக்கிய தோனி: 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை முடிந்த பின்னர் இந்திய அணியில் இருக்கும் ஒரு சில சீனியர் வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பல இளம் வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வந்தார். சீனியர் வீரர்கள் சேவாக், கம்பீர் மற்றும் யுவராஜ் போன்றவர்களை அணியிலிருந்து நீக்கி பல அதிரடி முடிவுகளை எடுத்தார்.
அதற்கு முழு காரணம் வருங்கால இந்திய அணியை கட்டமைக்கவே அவர் இத்தகைய முடிவை தைரியமாக எடுத்தார். இது அந்த நேரத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கியது.
டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த தோனி: டெஸ்ட் போட்டியில் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து, இளம் வீரர்கள் உருவாக வாய்ப்பளித்தார். இது இவரின் சுயநலமற்ற கிரிக்கெட் வாழ்க்கையை உணர்த்துகிறது.
வின்னிங் ஷாட் அடிக்க விராத் கோலிக்கு வாய்ப்பு கொடுத்தது: 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றிக்கு தேவைப்படும் ஒரு ரன்னை அடிக்க விராத் கோலிக்கு விட்டுக் கொடுத்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி தான் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதற்காகவே தோனி விராத் கோலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக இச்செயலைச் செய்தார்.
கோப்பையை இளம் வீரர்களிடம் அளிப்பது: தோனி எந்த ஒரு தொடரிலும் வெற்றி பெற்ற பின்னர் தனது அணியில் விளையாடிய இளம் வீரர்களிடம் கோப்பையை கொடுப்பார். உதாரணத்திற்கு 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா மிகச் சிறப்பாக பந்துவீசி 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது திறமையை பாராட்டும் விதமாக கோப்பையை கைப்பற்றிய அடுத்த நொடியே ரவீந்திர ஜடேஜா கையில் ஒப்படைத்தார். தோனியின் இத்தகைய பண்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.