செல்வராகவன் படங்கள் சும்மாவே குறித்த நேரத்தில் வெளியாகாது. இதில் பைனான்ஸ் பிரச்சனை என்றால் அவ்வளவுதான். அந்த படம் கோமாவுக்கு சென்ற கதைதான். அப்படிப்பட்ட படம்தான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை என்னதான் மாஸ் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அதிக அளவில் சம்பளம் வாங்கினாலும், அவர்களை விட ஒரு படி மேல்தான் செல்வராகவன் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக செல்வராகவனுக்கு சிறப்பாக எதுவுமே அமையவில்லை.
ஏன் இத்தனைக்கும் முன்னணி நடிகரான சூர்யாவுடன் கூட்டணி போட்டு வெளியான என் ஜி கே படம் கூட படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் செல்வராகவன்.
அந்த வகையில் 2016ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியான போதே நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான படமும் இதுதான். ஆனால் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமான அந்த படம் தற்போது ஓடிடியில் வெளியிட தயாராகி வருகிறதாம்.
அனேகமாக பிப்ரவரி 14ஆம் தேதி அமேசான், நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் ஏதாவது ஒன்றில் வெளியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் காரணம் சமீபத்தில் செல்வராகவன் எடுத்த பழைய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகி இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.