விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் சர்கார் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் என்பவர் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.
பீஸ்ட் படத்தின் 3வது கட்ட படப்பிடிப்புகள் தற்போது சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதே ஸ்டுடியோவில் கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பர படப்பிடிப்பு நடந்தபோது விஜய் மற்றும் தோனி இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து யோகி பாபு, விடிவி கணேஷ், டான்சிங் ரோஸ் சபீர், மலையாள நடிகை அபர்ணா தாஸ் போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் நடிக்கப் போகிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானதிலிருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை பிளந்தது கொண்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நெல்சன் முதல் முதலில் நடிக்க கேட்டது இயக்குனர் மிஷ்கினை தான். மிஷ்கின் தற்போது பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருவதால் பீஸ்ட் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
இத்தனைக்கும் நெல்சன் திலீப்குமார் உங்களுக்காகத்தான் இந்த கதாபாத்திரத்தை யோசித்து எழுதினேன் என்று சொல்லியும், இதற்காக இன்னொரு தயாரிப்பாளரின் பணத்தை வீணடிக்க முடியாது என கூறி அனுப்பிவிட்டாராம். அதன் பிறகுதான் செல்வராகவனை படத்திற்குள் கொண்டுவந்துள்ளது படக்குழு.