பிரபல மலையாள நடிகையான ஷகிலா தனது 16 வயதில் திரைத்துறையில் அறிமுகமானார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழில் தூள், வாத்தியார், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷகிலா மிகவும் பிரபலமானார். கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட ஷகிலாவின் பிம்பம் இந்நிகழ்ச்சியின் மூலம் முற்றிலும் மாறியது. தற்போது சின்னத்திரையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் என தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக சிலர் இணையத்தில் செய்தி பரப்பியுள்ளனர். இது பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது. இருப்பினும் சற்றும் அதிர்ச்சியும் பதட்டமும் படாத ஷகிலா, பொய்யான செய்தி பரப்பியவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம். நான் இறந்துவிட்டதாக சில செய்திகளைக் கேள்விப்பட்டேன். நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, பெரிய புன்னகையுடன் இருக்கிறேன். கேரள மாநில மக்கள் என்னிடம் காட்டும் அக்கறைக்கு மிக்க நன்றி.
யாரோ ஒருவர் ஒரு கெட்ட செய்தியைப் பரப்பியிருக்கிறார். அதனால் எனக்கு நிறைய அழைப்புகளும், அன்பும் கிடைத்திருக்கின்றன. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. அந்த சோகமான செய்தியைப் பரப்பிய நபருக்கும் நன்றி. ஏனென்றால் அவர்தான் உங்கள் பார்வையை மீண்டும் என் பக்கம் திருப்பியிருக்கிறார்” என்று ஷகிலா பேசியுள்ளார்.