நீண்ட நாட்களாக இயக்குனர் ஷங்கர் முதல்வன் 2 படத்தின் கதையை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை தொடர்பு கொண்ட நிலையில் யாரும் செவிசாய்க்காததால் தற்போது அதே கதையை அக்கட தேசத்திற்கு கொண்டு சென்று விட்டாராம்.
2.O படத்திற்கு பிறகு சங்கர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வந்தார். இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்தியன் 2 படத்தின் மீது தானாகவே எதிர்பார்ப்பு அதிகமானது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட்டு படத்திற்கு ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கி விட்டது. இதன் காரணமாக இன்னும் ஆறேழு மாதங்களுக்கு இந்தியன்2 படத்தைப் பற்றிய பேச்சே இருக்கப்போவதில்லை.
அதுவரை சும்மா இருக்க முடியாது என தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் ஷங்கர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராம்சரண் மற்றும் ஷங்கர் இணையும் படம் ஷங்கரின் முதல்வன் 2 படத்தின் கதைதான் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்துள்ளன. சமூக கருத்துக்களுடன் கமர்சியல் அம்சங்களை சேர்த்து பிரம்மாண்டமாக கொடுப்பதில் சங்கர் வல்லவர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

ஆரம்பத்திலேயே இது ஒரு அரசியல் படம் என பேச்சுகள் அடிபட்ட நிலையில் தற்போது முதல்வன் 2 படம்தான் என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. முதல்வன் 2 படக்கதையை ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி ஆகியோரிடம் கூறியதாகவும், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்பதால் தான் தற்போது அதே கதையில் ராம்சரண் உள்ளே நுழைகிறார் என்பதும் சங்கர் வட்டாரங்களிலிருந்து கிளப்பி விடப்பட்ட ஒன்றாக உள்ளது.