சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களையும், மீடியாக்களையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது. ஒரு நடிகரோ அல்லது நடிகையோ அவரது சொந்த வாழ்க்கையில் என்ன செய்தாலும் அது மிகப் பெரிய செய்தியாக மட்டுமே பார்க்கப்படும். அவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி ஒரு மனிதர் என்பதெல்லாம் இங்கு கிடையாது.
மீடியாக்களை பொறுத்தவரை அவர் ஒரு செலிபிரிட்டி மட்டுமே என்ற கொள்கைகள் தான் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார்.
அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 40 வயதான நடிகர் சித்தார்த் சுக்லா ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் சுக்லாவின் உடலுக்கு பல முன்னணி பாலிவுட் பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனை பல மீடியாக்கள் மாறி மாறி புகைப்படமும், வீடியோக்களும் எடுத்து வந்தனர். அப்போதுதான் சித்தார்த் சுக்லாவின் குடும்பத்தினர் சோகத்தில் கண்ணீர் மல்க இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மனதை காயப்படுத்தியது.
இந்நிலையில் மீடியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நம் ஊடகங்கள், புகைப்படக்காரர்கள், இணையதளங்கள் ஆகியோர் இப்படி உணர்வுக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொள்வதை பார்க்கும் போது மனம் நொந்துபோகிறது.
இது செய்தி அல்ல, இது பொழுதுபோக்கும் அல்ல. உங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள். மனசாட்சியோடு இருங்கள்” என கூறியுள்ளார். இவர் கூறுவதும் சரிதான். அவரது மரணத்தை நினைத்து குடும்பத்தினர் கவலையில் கண்ணீரோடு இருக்கும் புகைப்படங்களை படம்பிடித்து தங்களது டிஆர்பிக்காக மீடியாக்கள் பயன்படுத்திக் கொள்வது மனிதத்தன்மையற்ற செயலாகவே உள்ளது. ஒரு உயிர் போயுள்ளது என்பதை தாண்டி அதையும் ஒரு வியாபாரமாக மாற்றிவரும் இதுபோன்ற செயல்கள் உண்மையில் கண்டிக்கத்தக்கது தான்.