ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் இருந்த மர்மங்கள்.. விரைவில் படமாக போகும் சுயசரிதை

தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகை இறந்த பிறகும் ரசிகர்களின் மனதில் வாழ்கிறார் என்று சொன்னால் அது நிச்சயம் சில்க் ஸ்மிதாவாக மட்டும் தான் இருக்க முடியும். தன்னுடைய கவர்ச்சி நடனத்தால், போதையேற்றும் கண்களால் ரசிகர்களை கிறங்கடித்தவர் சில்க் ஸ்மிதா.

இவர் 80 காலகட்ட தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகரான புகழை பெற்ற ஒரே நடிகை. இவருக்காகவே வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் உண்டு. இவ்வாறு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகையாக இருந்த இவர் தன் சொந்த வாழ்க்கையில் இருந்த பிரச்சனையால் 1996 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே அதிரச் செய்தது. மேலும் அவர் எதனால் இறந்தார் என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அந்த மர்மங்கள் இன்னும் நீடித்து கொண்டுதான் இருக்கிறது. சில வருடங்களுக்கு பிறகு அவருடைய வாழ்க்கையை படமாக்க பலரும் முயற்சி செய்தனர்.

அந்த வரிசையில் ஹிந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் நடிகை வித்யாபாலன் நடிப்பில் வெளியானது. அதைத்தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாளத்திலும் அவருடைய சுயசரிதை படம் வெளியானது. இந்நிலையில் தமிழில் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் சித்ரா லட்சுமணன், சில்க்கின் சுயசரிதையை படமாக்க திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே அவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அவை அனைத்தும் சில்க்கின் கவர்ச்சி பக்கங்களை மட்டும் உள்ளடக்கி காண்பிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அவரின் வாழ்க்கையில் பல மர்மங்களும், சொல்ல முடியாத சோகங்களும் நிறைந்து இருந்தது.

மேலும் ஒரு சாதாரண பெண்ணாக இருந்த சில்க் சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஒரு நட்சத்திரமாக எப்படி உருவெடுத்தார். அதற்காக அவர் சந்தித்த சவால்கள் என்ன என்பதை பற்றி எல்லாம் நாம் இதுவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி அவர் சந்தித்த போராட்டத்தைப் பற்றிய படமாக சில்க்கின் சுயசரிதை தமிழில் உருவாக இருக்கிறது.

இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் அனைத்தும் தற்போது தயாராக இருக்கிறது. அதில் சில மாறுதல்கள் செய்ய வேண்டிய காரணத்தினால் படம் சிறிது கால தாமதமாக எடுக்கப்பட இருக்கிறது. இருப்பினும் விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News