தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகர் என்றால் அது சிம்பு தான். இவரை மட்டும் பிரச்சனை தேடித்தேடி வருகிறது போல. சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் தலைப்பு நேற்று தான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக ஒரு பிரச்சனை தோன்றியுள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது இருவரும் மூன்றாவதாக மீண்டும் இணைந்துள்ளனர்.
ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இது சிம்புவின் 47வது படமாகும். எனவே, டிவிட்டரில் #SilambarasanTR47 மற்றும் #STR47 ஆகிய ஹேஷ்டேக்குகளை சிம்பு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இப்படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது ஆனால் தலைப்பிற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததால், தற்போது வெந்து தணிந்தது காடு என தலைப்பு வைத்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டரில் சிம்பு இதுவரை பார்த்திராத தோற்றத்தில் உள்ளார். இப்படத்தின் போஸ்டர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தான் இப்படத்தின் தலைப்பிற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மதிசுதா என்பவர் இதே தலைப்பில் ஒரு படத்தை அறிவித்துள்ளார். தலைப்பிற்கு கீழ் ‘மூடப்பட்ட பங்கர்களுக்குள் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதே தலைப்பை கௌதம் மேனன் தேர்ந்தெடுத்துள்ளதால், விரைவில் இது தொடர்பாக பஞ்சாயத்து எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு தலைப்புகள் வைத்து வேண்டாமென மூன்றாவதாக இந்த தலைப்பை தேர்வு செய்தனர். தற்போது இதற்கும் ஆப்பு வந்துவிட்டது.