கடந்த 2013ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நந்திதா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. முழு நீள காமெடி படமாக உருவாகி இருந்த இப்படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான சுமார் மூஞ்சி குமார் நல்ல வரவேற்பைப் பெற்றது.
விஜய் சேதுபதி நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் இப்படமும் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. காமெடி, ஆக்சன், வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி சிறப்பாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா குமார் என்ற தலைப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார். இப்படத்தை சினிமா வாலா பிக்சர்ஸ் சார்பாக சதிஷ் தயாரிக்கிறார்.
படத்தின் தலைப்பு மட்டுமல்லாமல் படத்தின் நாயகனும் மாற்றப்பட்டுள்ளார். ஆம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது சந்தானத்திற்கு பதில் சிம்பு இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவும் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இவற்றை முடித்த பின்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும், அவரது காமெடியும் ரசிகர்களால் பரவலாக ரசிக்கப்பட்டது. அவருக்கு ஈடு யாரும் இல்லை. இந்நிலையில் அவரது இடத்தை சிம்பு நிரப்புவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய் சேதுபதி தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். எனவே கால்ஷீட் பிரச்சனை காரணமாக கூட இப்படத்தில் நடிக்க முடியாமல் இருக்கலாம் என கருதப்படுகிறது.