சினிமாவில் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. இங்கு நுழைவதை விட சாதிப்பது அதைவிட கஷ்டம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அழகாக தெரியும். ஆனால் திரையுலகில் நுழைந்தால் தான் அங்கிருக்கும் அரசியலும், நிராகரிப்புகளும் நமக்கு புரியும்.
சினிமாவில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த பலர் காணாமல் போயுள்ளனர். அதில் சிலர் மட்டுமே எவ்வளவு அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும், நிராகரிப்புகளை சந்தித்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி நிச்சயம் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களில் மிகவும் முக்கியமான நடிகரை தான் நாம் பார்க்க போகிறோம். அவர் வேறு யாருமல்ல குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் பேவரைட் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தான். சாதாரண ஸ்டண்ட் அப் காமெடியனாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி இன்று டாப் நடிகராக உயர்ந்துள்ளார்.
ஸ்டண்ட் அப் காமெடியனில் இருந்து தொகுப்பாளராக உயர்ந்த சிவகார்த்திகேயன் தனது நகைச்சுவையான பேச்சு மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவரது நகைச்சுவை உணர்வுக்காகவே இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் டாப் நடிகராக உயர்ந்து வருங்கால தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஒரு காலத்தில் இது போன்ற மேடைகளில் தொகுப்பாளராக நின்ற சிவகார்த்திகேயன் இன்று அதே மேடையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருப்பது தன் மூலம் அவர் எந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிகிறது.
அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் போது மேடையில் அனைவரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிகர் சிவகார்த்திகேயன் கையை பிடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருப்பார். இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை ரசிகர்கள் இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர். ஆங்கராக தனது வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது ராஜமவுலி போன்ற பிரமாண்ட இயக்குனருடன் அமர்ந்திருப்பது ரசிகர்களுக்கு பெருமையாக தான் உள்ளது.