தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான்.
ஆர் ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் பிரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
அயலான் படத்தை தயாரித்துள்ள 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ள 5 கோடி ரூபாய் கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோர வேண்டும் என டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி கடனாக பெற்றிருந்த நிலையில் தற்போது வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து அயலான் படத்தை தயாரிக்கும் நிலையில், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் படக்குழுவினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், சில படங்களை தயாரித்து அதனால் ஏகப்பட்ட கடனில் தவித்து வந்தார். தற்போது டாக்டர் படம் மூலம் அந்த பிரச்சனை ஓரளவிற்கு சமாளித்து, தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்த சமயத்தில் அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலந்தி வலை போல் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி முழித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.