சினிமாவை பொருத்தவரை ஜெயிக்கும் குதிரையின் மீது தயாரிப்பாளர்கள் பந்தயம் கட்டுவது தான் வழக்கம். அதேபோல் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர்களை தலையில் தூக்கிக் கொண்டாடுவது ரசிகர்களின் பழக்கம். ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு ஏற்ப ரசிகர்களின் ரசனை மாறும்போது அவர்கள் விரும்பும் நடிகர்களும்கூட மாறலாம்.
இல்லையென்றால் அவர்கள் நடிக்கும் படத்தின் மீது விரும்பமில்லாமல் குறைந்துபோகலாம். ஒரு படத்தின் வெற்றி தோல்வி ரசிகர்களால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தாலும் இதற்கு ரசிகர்களை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. அப்படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு, காட்சியமைப்பு, பாடல் இதெல்லாம் சேர்த்துதான் நல்ல படத்தை ரசிகர்கள் தீர்மானிக்கின்றனர்.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா படம் நல்ல முயற்சி, பிரமாண்ட பொருட்செலவு, இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வி.எஃப்.எக்ஸ் இதெல்லாம் இருந்தாலும், கதையிலும், திரைக்கதையிலும் கோட்டைவிட்டுவிட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கங்குவா படக்குழுவுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விமர்சனத்தையும், வெறுப்பையும் அள்ளிக் கொட்டினர் ஆடியன்ஸ்.
இதைப் பொறுக்க முடியாமல், நடிகை ஜோதிகா தன் கணவர் சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு பதிவிட்டிருந்தார். அதில், கங்குவா படத்தின் முதல் அரைமணி ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒலி அமைப்பும் சரியாக இல்லை. சில குறைகள் இருந்தாலும், 3 டி தொழில் நுட்பம், சண்டைக் காட்சிகள், ஒளிப்பதிவு இதெல்லாம் பாராட்டும் வகையில் உள்ளன. திட்டமிட்டே தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக கூறியிருந்தார்.
சூர்யாவை விஞ்சிய சிவகார்த்திகேயன்.. ஜோதிகாவின் விமர்சனம் எதற்காக?- சினிமா விமர்சகர்
ஜோதிகாவின் பதிவை ட்ரோல் மெட்டீரியலாக்கினர் நெட்டிசன்ஸ். தீபாவளிக்கு ரிலீசான சிவகார்த்திகேயனின் அமரன் படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் ரூ.295 கோடிகள் முதல் ரூ.300 கோடிகள் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்துக்குப் போட்டியாக வெளியான சூர்யாவின் கங்குவா நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகி உலகளவில் ரூ.95 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவகார்த்தியேனின் அமரன் படம் ரூ.300 கோடி வசூலித்த நிலையில், சூர்யாவின் கங்குவா பட வசூல் குறைவு மற்றும் சூர்யாவை சிவகார்த்திகேயன் விஞ்சிவிட்டார் என்பதன் வெளிப்பாடாக ஜோதிகாவின் விமர்சனமா? என பிரபல சினிமா விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சூர்யாவுக்கு சிவா போட்டியா? இல்லையா?
சூர்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தியேட்டரில் வெளியான எந்தப் படமும் ஓடவில்லை என சினிமா விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், தன் ஆஸ்தான இயக்குனர்களான கெளதம் மேனன், சுதா கொங்கரா, பாலா, அமீர் ஆகியோரின் கதைகளை நிராகரித்த சூர்யா தேர்ந்தெடுத்த கதைகளில்தானே நடித்து வருகிறார். அப்படி இருக்க அவர் சறுக்கிய இடத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து மீண்டெழ வேண்டுமென சினிமா விமர்சகர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் சூர்யாவுக்கு சிவா நிச்சயம் போட்டியாக இருக்க வாய்ப்பில்லை என ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.