வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவகார்த்திகேயன் டானாக ஏற்றுக் கொள்ளப்பட்டாரா.? டான் திரைப்படம் ஒரு அலசல்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் என அனைத்தும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த படத்தை பலரும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

கதைப்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பாவாக சமுத்திரக்கனி ஒரு வலுவான கேரக்டரை ஏற்று இருக்கிறார். அதற்கு ஏற்றாற்போல் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து கனகச்சிதமாக அவர் செய்திருக்கிறார். பெண் குழந்தைக்கு ஆசைப்படும் சமுத்திரகனி ஆண் குழந்தை பிறந்துவிட்டதால் சற்றே கடுகடுப்புடன், பாசம் இல்லாமல் இருக்கிறார்.

பள்ளியில் துறுதுறு மாணவனாக இருக்கும் சிவகார்த்திகேயன் அப்பாவின் டார்ச்சரால் இன்ஜினியரிங் காலேஜில் சேருகிறார். கல்லூரியில் கடைசி பென்ச் மாணவனாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும், வாத்தியார் எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன்பிறகு எஸ் ஜே சூர்யாவை கல்லூரியில் இருந்து வெளியேற்ற அவர் போடும் திட்டம் அவருக்கு எதிராக அமைந்து விடுகிறது.

அந்த கோபத்தில் அவரை பழிவாங்க எஸ் ஜே சூர்யா திட்டமிடுகிறார். அதை சிவகார்த்திகேயன் எப்படி சமாளித்தார். கடைசியில் அவர் தன் லட்சியத்தை அடைந்தாரா, சமுத்திரகனி எதற்காக பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டார் என்பதை மிக ஜாலியாகவும், பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை அப்படியே ரசிகர்களின் முன்பு நிறுத்தி இருக்கிறது இந்த டான் திரைப்படம்.

அந்த வகையில் ரசிகர்கள் பலரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த டான் திரைப்படம் பாஸ் ஆனதா? அல்லது பெயில் ஆனதா என்கிற முழு விமர்சனத்தை இங்கு பார்ப்போம். வழக்கமாக சிவகார்த்திகேயன் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

அதுவும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட படம் என்பதால் இந்தப் படத்தில் கலகலப்புக்கு குறைவில்லாமல் இருக்கிறது. டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனின் கெமிஸ்ட்ரி இதிலும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. வழக்கம்போல அனிருத் இந்த படத்திலும் தன்னுடைய இசையின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மேலும் எஸ் ஜே சூர்யாவின் மிரட்டலான வில்லத்தனம் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மாநாடு திரைப்படத்தைப் போலவே இந்தப் படத்திலும் அவர் வரும் காட்சிகளில் விசில் பறக்கிறது. அந்த வகையில் இயக்குனர் படத்தில் ஒவ்வொரு கேரக்டர்களையும் சரியாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் கலகலப்பும், இரண்டாம் பாதியில் சென்டிமென்ட்டும் கலந்து பக்கா கமர்ஷியலாக இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இப்படம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாகவும் இருக்கிறது. ஒரு சில இடங்களில் சிறு சிறு சறுக்கல்கள் இருந்தாலும் மொத்தத்தில் சிவகார்த்திகேயன் டானாக ஜெயித்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

Trending News