சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் சிறந்த படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வெளியாகியுள்ளது. இப்படம் டைம் லூப் பாணியில் வித்தியாசமாக உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
எல்லா படங்களிலும் ஹீரோவிற்கு தான் பெயரும் புகழும் கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் சிம்புவை விட வில்லன் கேரக்டரில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு தான் புகழ் கிடைத்து வருகிறது. அதுவும் சாதாரண புகழ் அல்ல கோலிவுட்டின் அடுத்த ரகுவரன் இவர் தான் என கூறும் அளவிற்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
ரகுவரன் சாதாரண நடிகர் அல்ல. இவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் என்று தான் கூற வேண்டும். இவரை போன்ற ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. ஒல்லியான தோற்றம் ஆறடி உயரம் என பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் ரகுவரன் வில்ல தனத்தில் மிரட்டி இருப்பார். அதிலும் அவரின் குரல் தான் அல்டிமேட். ஆஜானுபாகுவான உடல்வாகு இருந்தால் மட்டும் தான் வில்லனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை உடைத்தவர் தான் ரகுவரன்.
கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் என்ற படம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகர் ரகுவரன் வில்லன், குணச்சித்திரம், காமெடி என அனைத்து விதமான கேரக்டரிலும் புகந்து விளையாடுவார். நடிப்பில் இவரை அடித்து கொள்ள ஆளே கிடையாது. ஆனால் உடல்நல குறைவு காரணமாக 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரது நடிப்பு மூலம் இன்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
தற்போது வரை ரகுவரன் இடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை. ஆனால் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பை பார்த்த சிலர் இவர் தான் அடுத்த ரகுவரன் என கூறி வருகிறார்கள். வில்லத்தனம் என்றாலே அது ரகுவரன் தான் எனும் அளவிற்கு பெயர் பெற்ற நடிகருடன் எஸ்.ஜே.சூர்யாவை ஒப்படுகிறார்கள் என்றால் அவரின் நடிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
