தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மு க ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றார். இதுவரைக்கும் ஒரு சிலரைத் தவிர முதலமைச்சராக பதவியேற்ற பலரும் திரையுலகில் பணியாற்றியவர்களே உள்ளனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி அவர்கள் வரிசையில் தற்போது ஸ்டாலினும் இடம் பிடித்துள்ளார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு திரைத்துறையில் பணியாற்றியுள்ளார்.
திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி.கலா எனும் மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு” எனும் நாடகத்தில் நடித்தார். இதுவே அவரது முதல் நாடகம்.
அதன் பிறகு திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான் மற்றும் நாளை நமதே போன்ற திராவிட கொள்கைகளை முன்வைக்கும் நாடகங்களில் நடித்தார்.
தொடர்ந்து தூர்தர்ஷனில் 13 பாகங்களாக வெளியான குறிஞ்சி மலர் என்னும் சீரியலில் அரவிந்தன் எனும் கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடித்தார்.
நாடகத்தில் நடித்த ஸ்டாலின் அதன் பிறகு ஒரே இரத்தம் மற்றும் மக்கள் ஆணையிட்டால் எனும் 2 படங்களில் நடித்து சினிமாவில் கால் பதித்தார். இதில் மக்கள் ஆணையிட்டால் படத்தில் விஜயகாந்த் மற்றும் ரேகா நடித்திருந்தனர். இந்த படத்தில் ஸ்டாலின் ஆற அமர்ந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனும் பாடலை பாடுவது போல் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒரு சில நாடகங்கள் மற்றும் படங்களில் நடித்த ஸ்டாலின் 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்தி தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சினிமா பேட்டை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்