மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
அதேபோல் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. மேலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (மார்ச் 10ஆம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு காரில் ஏற முயன்ற போது மம்தா பானர்ஜியை சிலர் தள்ளி விட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மம்தா அளித்த பேட்டியில், காரில் ஏற முயன்றபோது தன்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளி விட்டதாகவும், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களது கண்டனத்தை இணையத்தளங்களின் வாயிலாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட அவமானகரமான தாக்குதல் என்றும், இத்தகைய குற்றத்தை புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த தாக்குதல் குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், தேர்தல் ஆணையமும், காவல் துறையினரும் இணைந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மம்தா விரைவில் உடல் நலம் தேறி வர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் மு க ஸ்டாலின்.
மேலும் மு க ஸ்டாலினின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.