கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் குறைந்தது 35-லிருந்து 40 வயதிற்குள் தங்களது ஓய்வு முடிவை அறிவித்து விடுவார்கள். ஓய்விற்குப் பின் அவர்கள் கிரிக்கெட் சார்ந்த ஏதாவது ஒரு விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வேலை செய்வார்கள். அப்படி கிரிக்கெட் அல்லாது மொத்தமாக தங்களது பாதையை மாற்றி வேறு ஒரு கோணத்தில் சென்ற ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள்.
நாதன் ஆஷ்லே: 90களில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் இவர். ஓபனராக களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய நாதனே ஆஷ்லே நியூசிலாந்து அணிக்காக 223 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7090 ரன்களையும் 99 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். கிரிக்கெட்டிற்கு பின் கார் ரேஸில் தனது கவனத்தை செலுத்தி நியூசிலாந்தில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கு பெற்று வருகிறார்.
கர்ட்லி அம்ப்ரோஸ்: ஒரு காலத்தில் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரர் அம்ப்ரோஸ். 7அடி உயரமுள்ள இவர் ஆக்ரோஷமாக பந்து வீசக்கூடியவர். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இவர் கிட்டார் வாசிப்பதில் வல்லவர். தனியாக ஒரு கிட்டார் ட்ரூப் நடத்தி வருகிறார்.
அன்ரூ பிளின்டாப்: இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பிளின்டாப். இவர் இந்திய அணிக்கு எதிராக ஒரு போட்டியில் வென்ற பின் சட்டையை கழற்றி மைதானம் முழுவதும் சுற்றிவந்தார். அதற்கு தக்க பதிலடியாக நம் கேப்டன் சவுரவ் கங்குலியும் இங்கிலாந்து நாட்டில் போட்டியை வென்ற பின் சட்டையை கழற்றி சுற்றினார். தனது ஓய்வுக்கு பின் பிளின்டாப் குத்து சண்டை வீரராக மாறியுள்ளார்.
ஹென்றி ஒலங்கா: சர்ச்சைகளுக்கு பெயர் போன வீரர் ஒலங்கா. இவர் ஒருமுறை சச்சின் டெண்டுல்கரிடம் வம்பிழுத்து வசமாக வாங்கிக்கொண்டார். இவர் ஒரு பாடகர். தனியாக ஒரு மியூசிக்கல் ட்ரூப் நடத்தி வருகிறார்.
சலில் அங்கோலா: இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கருடன் அறிமுகமானவர் சலில் அங்கோலா. 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அங்கோலா 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வை அறிவித்து சினிமா பக்கம் தனது கேரியரை மாற்றினார். இவர் தற்போது சின்ன சின்ன தொடர்களிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுமாக நடிப்பின் பக்கம் சென்று விட்டார்.