வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா.. பரபரப்பைக் கிளப்பிய ஜெய்

தளபதி விஜயின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஜெய், அதைத்தொடர்ந்து சுப்பிரமணியபுரம், சரோஜா போன்ற பல படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் நடிகராகவே தெரிகிறார்.

இதனால் கதாநாயகனாக நடித்தால் செல்லுபடியாகாது என தன்னுடைய டிராக்கை மாற்றி, தற்போது வில்லனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். பத்ரி நாராயணன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் பட்டாம்பூச்சி என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் கொலைகார சைக்கோவாக வில்லனாக ஜெய் புது அவதாரம் எடுத்திருக்கிறார்.

இவர்களுடன் ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோரும் பட்டாம்பூச்சி படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படம் நேற்று திரையரங்கில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஜெய், கலெக்டராக ஆசைப்பட்ட இளம் நடிகை ஒருவருக்கு கை கொடுத்து உதவி இருக்கும் செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

களவாணி படத்தில் விமலுக்கு தங்கச்சியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. தற்போது இவர் கதாநாயகி தங்கை மற்றும் ஹீரோயின் தோழி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பு மட்டுமின்றி படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுதவிர சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சட்டப் படிப்பு முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது அம்மாவிற்கு இவர் கலெக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. அதற்காக சிவிஸ் பயிற்சித் தேர்வில் இருக்கிறார். தற்போது இவருக்கு பயிற்சி கட்டணம் கட்ட முடியாமல் புத்தகம் வாங்க முடியாமல் இருந்துள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட ஜெய் அழைத்து அவரது முயற்சியை பாராட்டியுள்ளார். மேலும் அவருக்கு பயிற்சி கட்டணம் முழுவதையும் தான் கட்டுவதாகவும் புத்தகங்கள் வாங்குவதற்கான உதவியும் செய்வதாகவும் கூறி உள்ளார். தற்போது ஜெய்யின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Trending News