தமிழ் சினிமாவில் என்னதான் ஆயிரம் ஆண் இயக்குனர்கள் இருந்தாலும் தனி ஒரு பெண்ணாக மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது ஆஸ்காருக்கு செல்லும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளவர்தான் சுதா கொங்கரா. ஆந்திரா ஆண்டகாடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சுதா கொங்கரா.
தமிழில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் நடித்த துரோகி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்திற்கு பிறகு ஆறு வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இறுதிச்சுற்று என்ற படத்தை 2016 ஆம் ஆண்டு கொடுத்தார்.
ஹிந்தியில் சாலா கடூஸ் என்ற பெயரிலும் வெளியானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இறுதிச்சுற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் மார்க்கெட் இழந்த மாதவனுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இறுதி சுற்று படம் தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டு சூரரைப்போற்று எனும் படத்தைக் கொடுத்தார். மாபெரும் வெற்றியைப் பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் தற்போது ஆஸ்கார் அவார்டு போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுதா கொங்கராவிடம் சமீபத்தில் உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டுள்ளனர்.
அதற்கு சுதா கொங்கரா, ஆணாதிக்கம் நிறைந்த இந்த சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்வியை சந்திக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் வலுப் பெற்று விடுவோம் என குறிப்பிட்டுள்ளார். அப்படித்தான் தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் அதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டு என்னை நானே தேற்றிக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ளக் கூடாது எனவும், தோல்வியை சந்திக்க தயங்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். சுதா கொங்கராவின் இந்த பேச்சு பல பெண் இயக்குனர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். அடுத்ததாக சுதா, தல அஜித்துடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.