சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நடிகர்களின் படங்களுக்கு மட்டும் மிகப்பெரிய விளம்பரம் செய்கிறார்களோ என்ற எண்ணம் சூர்யா 40 படத்தின் அறிவிப்புகள் மூலம் ரசிகர்களுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது.
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்களில் மிகவும் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். சீரியல்கள் முதல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரை அனைத்துமே சன் டிவி வசம் தான்.
அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய முன்னணி நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். குறிப்பாக ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் போன்றோரைச் சொல்லலாம்.
ஆனால் இதில் விஜய் மட்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ரொம்பவும் ஸ்பெஷல் போல. விஜய் படங்களின் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னர் ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு கடைசி வரை ஏங்கவிட்டு சரியான நேரத்தில் வெளியிடுவார்கள். அவ்வளவு ஏன், தளபதி 65 பட அறிவிப்பை கூட காலையிலிருந்து மாலை வரை ஒரு புதிய அப்டேட் வருகிறது என ரசிகர்களை காக்க வைத்து மாலையில் வெளியிட்டனர்.
ஆனால் அதே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்தையும் தயாரித்து வருகிறது. ஆனால் சூர்யா 40 படத்தின் அறிவிப்புகளை எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் நினைத்த நேரத்தில் வெளியிடுகின்றனர். அப்படித்தான் சூர்யா 40 படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளதையும் இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்த கேள்வி சூர்யா ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருவதுதான். இருந்தாலும் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்பதால் படம் ரிலீசாகும் சமயத்தில் மிகப் பெரிய விளம்பரம் செய்வார்கள் என மனதை தேற்றிக் கொள்கின்றனர். இருந்தாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஓரவஞ்சனை செய்வதாக தோன்றுவதில் தவறு ஒன்றும் இல்லையே.