சிவகார்த்திகேயனை தொடர்ந்து டிவியிலிருந்து அடுத்த ஹீரோ.. ஜி நீங்களும் கிளம்பிட்டா நாங்க என்ன பண்றது

சமீபகாலமாக சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தொடங்கி அஸ்வின் வரை அனைவரும் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்து விட்டனர்.

அந்த வரிசையில் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக இருக்கும் அசீம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். சன் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த இவர் அதே சேனலில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். பகல் நிலவு சீரியலில் இவர் பிக்பாஸ் புகழ் ஷிவானிக்கு ஜோடியாக நடித்தார். அந்த சீரியலில் அவர்களின் கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் இணைந்து நடித்தனர். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக பல வதந்திகள் பரவியது. ஆனால் அதுபற்றிய விளக்கத்தை அவர்கள் இருவரும் வெளிப்படையாக கூறாமல் இருந்தனர்.

அந்த சமயத்தில் ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதனால் அசீமையும் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்புவதற்கு பல முயற்சிகள் நடந்தது. இருப்பினும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

தற்போது அசீம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் அவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

கல்லூரியில் நடக்கும் காதலை மையப்படுத்தி உருவாக்கப்படும் கதையில்தான் இவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மாடல் நடிகையான ஆலியா நடிக்க இருக்கிறார். இந்தப் படம் நேரடியாக ஜீ 5 தளத்தில் வெளியாக இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதனால் அசீமை வெள்ளித் திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.