பண்டிகை நாட்களை பொருத்தவரையில் புதிய புதிய படங்களை வெளியிடுவதில் சன் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பதுதான் நிதர்சனம். திரைப்படங்களை பொறுத்தவரை மற்ற சேனல்களை சன் டிவி ஒரு படி மேல்தான் இருக்கும்.
சன் டிவியில் படம் பார்த்தால் சுமாரான படம் கூட நன்றாக இருக்கும் என்பது தான் மக்கள் கருத்து. அந்த அளவுக்கு தரமான ஒளிப்பதிவில் கொடுத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க வருகின்ற பொங்கலை ஒட்டி அனைத்து சேனல்களும் விதவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.
ஆனால் சன் டிவி நிறுவனம் சூர்யாவின் ஒரே ஒரு படத்தை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்துள்ளதாம். இந்த முயற்சியில் 100% சன் டிவிக்கு லாபம்தான் என்கிறார்கள் கோலிவுட் பிரபலங்கள். சூர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியானது. மேலும் அமேசான் தளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பார்வையாளர்களை குவித்த திரைப்படமாகவும் சூரரைப்போற்று மாறியது.
இந்திய அளவில் ஒடிடியில் சாதனை படைத்த படங்களின் லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் தமிழில் சூரரைப்போற்று படமும், ஜெமினி டிவியிலும் அதே நேரத்தில் தெலுங்கில் சூரரைப்போற்று படத்தையும் ஒரே நேரத்தில் ஒளிபரப்ப உள்ளார்களாம்.
இதனால் கண்டிப்பாக டிஆர்பி போட்டியில் சூரரைப்போற்று படம் புதிய உச்சத்தைத் தொடும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்தியாவிலேயே ஒரே படம் வெவ்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் தொலைக்காட்சிகளில் வெளியாவது இதுதான் முதல்முறையாம்.